ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை..! - கல்லூரி கல்வி இயக்ககம் எச்சரிக்கை
கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் கீதா வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவரிடம், அதே விடுதியில் தங்கி படிக்கும் சீனியர் மாணவர்கள் ஏழு பேர் மது அருந்த பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவருக்கு மொட்டை அடித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் ராகிங்கில் ஈடுபட்ட ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கல்லூரிகளில் ராகிங் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் கீதா அறிவுறுத்தியுள்ளார். கல்லூரியில் உள்ள ராகிங் தடுப்பு குழுக்கள் மூலம் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு இதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : புதுச்சேரியில் திட்டமிட்டபடி நாளை போராட்டம் - அதிமுக அறிவிப்பு..!
மேலும், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், ராகிங் குறித்த மாணவர்களின் புகார்களை எளிதில் பெரும் வகையில் கல்லூரி முதல்வர்கள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ராகிங், சட்டப்படி குற்றம் என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் கீதா அறிவுறுத்தியுள்ளார்.