”தெருநாய்களை காப்பகத்திற்கு மாற்றும் விவகாரம்” - வழக்கறிஞரை தாக்கிய விலங்குகள் நல ஆர்வலர்கள்!
நாடு முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் நாய் கடி சம்பவங்கள் ஏற்பட்டு ரேபிஸ் நோய் தாக்கத்தினால் உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகர் டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்திற்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக இன்று விலங்கு நல ஆர்வலர்கள் சிலர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தனர். இது குறித்து பரிசீலிக்கப்படும் என தலைமை நீதிபதி கூறியிருந்தார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு எதிர்ப்புறம் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில், வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞரை விலங்குகள் நல ஆர்வலர்கள் கடுமையான வார்த்தைகளால் திட்டி பேசியுள்ளனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் வழக்கறிஞரை விலங்கு நல ஆர்வலர்கள் தாக்கியுள்ளனர். தற்போது இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்திற்கு வெளியே வழக்கறிஞரை விலங்கு நல ஆர்வலர்கள் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.