இசையால் ரசிகர்களை கட்டிப்போட்ட புயல் - ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் இன்று.!
நாடுகளின் எல்லை தாண்டி இசையால் இதயங்களைக் கட்டிப்போட்ட தமிழன்., தன்னுடைய இசையால் தமிழுக்கும், தேசத்திற்கும் மகுடம் சூட்டியவர் ஏ.ஆர்.ரஹ்மான். ரசிகர்களை ஆட்கொண்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த செய்தித் தொகுப்பைக் விரிவாக காணலாம்.
அமெரிக்க மண்ணில், உலகமே உற்று நோக்கிய மேடையில் கையில் இரண்டு ஆஸ்கர்களை ஏந்தி, தன்னுடைய தாய் மொழிக்கும், தமிழினத்திற்கும் பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் “எல்லா புகழும் இறைவனுக்கே” என்கிற வார்த்தையை உதிர்த்தார். அந்த மேடையை அடைய ஏ.ஆர்.ரஹ்மான பல கரடு முரடான பாதைகளை கடக்க வேண்டி இருந்தது.
தமிழ்நாட்டின் இசை ஜாம்பவான்களான எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, டி.ராஜேந்தர் உள்ளிட்டவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த ஏ.ஆர்.ரஹ்மான் விளம்பரப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த காலம். அப்போது மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைக்க, இயக்குநர் கே.பாலசந்தர் ஏ.ஆர்.ரஹ்மானை பரிந்துரை செய்தார். கவிதாலயா பிலிம்ஸின் ரோஜா திரைப்பட பாடல்கள் வெளியாகி யார் இந்த ஏ.ஆர்.ரஹ்மான என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 1992 ஆம் ஆண்டு ரோஜா பட கேசட்டுகள் விற்பனையில் சாதனை படைத்தது தனிக்கதை.
காதலன் படத்தில் முக்காலா முக்காபுலா, இந்தியன் படத்தில் கப்பலேறி போயாச்சு,
ஜீன்ஸ் படத்தில் அன்பே அன்பே கொல்லாதே.. முதல்வன் படத்தில் குறுக்கு சிறுத்தவளே,
பாய்ஸ் படத்தில் காதல் சொன்ன கணமே என ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த அத்தனை படங்களிலுமே பாடல்கள் ஹிட் அடித்தன.
இசை மட்டுமல்லாது தன்னுடைய குரலாலும் மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் ரஹ்மான். அந்தக் குரலுக்கு ஆஸ்கர் கிடைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆங்கிலத்தில் சொல்வதென்றால் - HIS VOICE DESERVES. அவர் இடையமைத்து பாடிய JAI HO பாடல், அந்த அரபிக் கடலோரம், முஸ்தஃபா போன்ற பாடல்கள் மூலம் அவரது குரலுக்கு தனி ரசிகர்களை தேடித் தந்தது.
இந்திய மொழிகளை ரஹ்மானின் இசை அலங்காரம் செய்ததைப் பார்த்த ஹாலிவுட்டும் அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்தது. லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஸ்லம் டாக் மில்லினியர் உள்ளிட்ட படங்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இசையில் தனக்கென தனிமேடை அமைத்துக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று.. ஹம்மிங் மட்டுமே வைத்து உருவாக்கிய ராசாத்தி என் உசுரு பாடல். இயக்குநர் சங்கர், மணிரத்னம் உள்ளிட்டோரின் முதல் சாய்ஸாக ஏ.ஆர்.ரஹ்மான் இன்றளவும் இருக்க அவர் உருவாக்கும் மெட்டுகள் மட்டுமல்லாது, பின்னணி இசையும் முக்கிய காரணம்.
அதேபோல பின்னணிப் பாடகர்களான சித் ஸ்ரீராம், சுக்வீந்தர் சிங், சின்மயி, கார்த்திக், நரேஷ் ஐயர் போன்ற இளையவர்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த ஏ.அர்.ரஹ்மானின் சமீபத்தில் வடிவேலுவின் மேஜிக் குரலில் வெளியான மலையிலதான் தீப்பிடிக்குது ராசா மற்றும் தேவாவின் குரலில் நெஞ்சமே நெஞ்சமே பாடல்கள் ரசிகர்களை கிறங்கடித்தன.
திரையுலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசையால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ரஹ்மான் எனும் இசைப்புயல் ஆஸ்கர், தேசிய விருது உட்பட 175 விருதுகளை பெற்று ஆசியாவிலேயே அதிக விருதுகளை பெற்ற இசையமைப்பாளர் என்கிற சாதனையும் படைத்துள்ளார்.
- அருள் முருகன் , நியூஸ் 7 தமிழ்