வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடைந்த ‘ரிமல்’ புயல்.. - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்கக்கடலில் நிலை கொண்டு உள்ள ரிமால் புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாகவும், இன்று நள்ளிரவு மேற்குவங்கம் அருகே கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வடக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ரிமால் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து இன்று (மே 26) காலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது.
இந்த தீவிர புயல் வங்கதேசத்தின் கெபுபாராவிற்கு தென் தென் மேற்கே சுமார் 290 கி.மீ, தொலைவிலும், வங்க தேசத்தின் மோங்லாவிலிருந்து தெற்கே 330 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு தென்-தென்கிழக்கே சுமார் 270 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் திகாவிலிருந்து தென்-தென்கிழக்கே 390 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் கேனிங்கிற்கு தெற்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்க கடற்கரையை சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே, தென்மேற்கே மோங்லா வங்கதேசத்துக்கு அருகே இன்று நள்ளிரவு தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது. கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 110-120 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும்”
என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.