உருவானது ‘மிக்ஜாம்’ புயல்... மக்களே உஷார்...
வங்கக் கடலில் ‘மிக்ஜம்’ புயல் உருவானது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை (டிச. 3, 4) சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் நேற்று நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று புயலாக வலுப்பெற்றுவிட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி சென்ட்ரல், எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாநகர், திநகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வளசரவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அது போல் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, குன்றத்தூர், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் மாநகராட்சி நிர்வாகம், மின்சாரம், காவல், வடிகால் வாரியம் உள்ளிட்ட ஊழியர்களும் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். வங்கக் கடலில் சென்னையிலிருந்து 340 கி.மீ. தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தம் மையம் கொண்டுள்ளது. இதன் வேகம் சற்று அதிகரித்தும் வருகிறது. இது வடதமிழக கடலோரம் வழியாக தெற்கு ஆந்திராவுக்கு செல்லும். இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையை கொடுக்கும். இந்த நிலையில் இதுகுறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் வந்துள்ள தொடர் அப்டேட்டுகளை பார்ப்போம்.
ஆழ்ந்த காற்றழுத்தம் சென்னை கடற்கரையை இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் நெருங்கும். வடமேற்கு திசையில் புயல் நகரும் போது சென்னை, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மழை அதிகரிக்கும். கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாகவே இருக்கும். இன்று மாலை 6 மணி முதல் நாளை அதிகாலை வரை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயலானது நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே சரியாக எங்கு கரையை கடக்கும் என்பதில் சற்று இழுபறி நீடிக்கிறது. மக்கள் யாரும் இன்று முழுவதும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். காற்றின் வேகம் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசும். இவ்வாறு சென்னை வெதர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.