Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#StopHarassment: “பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்” - நடிகர் பிருத்விராஜ்!

02:13 PM Aug 27, 2024 IST | Web Editor
Advertisement

பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். 

Advertisement

கடந்த வாரம் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகம், மட்டுமின்றி அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தாங்கள் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும். நான் செல்லும் படப்பிடிப்பு தளம் மட்டும் பாதுகாப்பானதா என்பது குறித்த அக்கறை மட்டும் இருந்தால் அது போதாது. ஒட்டுமொத்த திரைத்துறையும் பாதுகாப்பானதா என்பதை உறுதிசெய்வதும் என் கடமை. இந்த பிரச்னையை சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்து சென்றுவிட முடியாது. ஹேமா குழுவிடம் முதல் ஆளாக விளக்கமளிக்கச் சென்ற நபர் நான் தான்.

விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுந்தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவ்விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை. குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கப்பட்டால், அப்போதும் பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்.

மலையாள திரைத்துறை கலைஞர்கள் கூட்டமைப்பான ஏஎம்எம்ஏ', பாலியல் புகார்கள் குறித்து நடவடிக்கைளை முறையாக எடுக்கவில்லை. கடும் நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். நான் பணிபுரியும், என்னைச் சார்ந்த படப்பிடிப்பு தளங்கள் உள்ளிட்ட இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ளதை உறுதிசெய்வேன்.

நான் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என்று சொல்லிவிட்டுக் கடந்து செல்வதுடன், நமது பொறுப்பு ஓய்ந்துவிடக் கூடாது. நீங்களும் பொறுப்பேற்க வேண்டும். தலைப்புச் செய்திகளாகப் பதிவிட்டுக் கடந்து சென்றுவிடுவதுடன் ஊடகங்களின் பொறுப்பு ஓய்ந்து விடக்கூடாது. நீதி கிடைப்பதை உறுதி செய்ய நாம் இணைந்து செயலாற்ற வேண்டும்.

மலையாள திரையுலகில் அதிகார வர்க்கம் இருப்பதை 'இல்லை' என மறுக்க முடியாது. ஆனால் நான் அதுபோன்ற அமைப்பால், அவர்களால் பாதிக்கப்படவில்லை. அதேவேளையில், அவர்களால் பாதிக்கப்பட்டுள்ளோரின் குறைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். அத்தகைய அதிகார வர்க்கம் இருக்குமாயின், அவர்களுக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். மலையாள திரைத்துறை கலைஞர்கள் கூட்டமைப்பான 'ஏஎம்எம்ஏ'-இன் தலைமைப் பொறுப்பில் பெண்களும் இருக்க வேண்டும்.

கேரள அரசு சினிமா சார்ந்த நபர்களுக்காக தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டால், அதன்மூலம் திரைத்துறையில் உள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு கிட்டும். மலையாள சினிமாவில்தான் இதுபோன்ற தவறு முதன்முதலாக திருத்தப்பட்டுள்ளது என்பது இந்திய சினிமா வரலாற்றில் பதிவாகப் போகிறது. திரைத்துறையில்தான் இது முதன்முதலில் நிகழ்ந்துள்ளது என்பதை வரலாறு நமக்கு நினைவூட்டும்" என்று பேசியுள்ளார் பிருத்விராஜ்.

Tags :
actormollywoodPRITHVIRAJ SUKUMARAN
Advertisement
Next Article