“பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தானில் பயிர்க் கழிவுகள் எரிப்பதை நிறுத்துங்கள்!” - உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
பயிர்க் கழிவுகள் எரிப்பதை நிறுத்த வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் காற்று மாசு கடந்த சில தினங்களாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காற்றின் தரக் குறியீடு 450 புள்ளிகளுக்கு மேல் கடந்து 'கடுமை' பிரிவில் உள்ளது. இதையடுத்து காற்று மாசைக் குறைக்க டெல்லி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதுதான் இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்சு துலியா அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அதுவே டெல்லி காற்று மாசுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது' என்று தெரிவித்தனர். மேலும், டெல்லி மாநகராட்சி திடக்கழிவுகள் திறந்த வெளியில் எரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டனர். காற்று மாசை தடுப்பது நீதிமன்றத்தின் கடமை மட்டும் அல்ல; அனைவரது கடமை என்றும் கூறினர்.