அமைச்சர் காந்தி மகனின் கார் மீது கல்வீச்சு - பாமகவினர் 6 பேர் கைது!
கைத்தறித்துறை அமைச்சர் காந்தியின் மகன் வந்த கார் கண்ணாடியை உடைத்ததாக பாமகவினர் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கலைஞ்செழியனை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் நேற்று அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட சித்தேரி வாக்குச் சாவடி மையத்தை பார்வையிடுவதற்காக கைத்தறித்துறை அமைச்சர் காந்தியின் மகன் வினோத் தனது காரில் சென்றுள்ளார். அவருடன் ஓட்டுநர், உதவியாளர் என இருவர் சென்றுள்ளனர்.
இதனையடுத்து உள்ளே சென்ற இவர்கள் அங்கிருந்த பாமகவினரை பார்த்துள்ளனர். உடனே உங்களை யார் உள்ளே விட்டது என அதட்டல் தோணியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு, ‘‘உங்கள் காரை உள்ளே அனுமதித்தது யார்? நீங்கள் எப்படி தி.மு.க துண்டு அணிந்து கொண்டு வாக்குச் சாவடிக்குள் வரலாம்’’ என பாமகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது பாமகவினர் பலர் ஒன்று திரண்டதால் காந்தி மகன் காரை எடுத்துக்கெண்டு புறப்பட்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது பின்னிலிருந்து யாரோ ஒருவர் வீசியெறிந்த கல்லால் அமைச்சர் மகன் வந்த சொகுசு காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீஸார் பா.ம.க-வினரை சமாதானப்படுத்தி அமைச்சர் மகனை காரில் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக, வினோத் காந்தியின் உதவியாளர் சீனிவாசன் என்பவர் அரக்கோணம் தாலுகா போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘‘சித்தேரி ஊராட்சித் தலைவர் கலைஞ்செழியன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த 20 பேர் காரை கையால் அடித்தனர். கற்களால் காரை சேதப்படுத்தினர். எனவே, மேற்படி நபர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் பாமகவினர் 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கலைஞ்செழியனை தேடி வருன்றனர்.