“நாய் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” - அமைச்சர் முத்துசாமி!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள மேலப்பாளையம், ஒரத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை தெருநாய்கள் கடித்து 50க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. இதனிடையே இரும்பு வலைகளால் செய்யப்பட்ட புதிய வகை ஆட்டுப்பட்டியை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஆடு வளர்ப்போர் ஆகியோர் பார்வையிட்டனர்.
மேலும் விலங்குகளிடமிருந்து விவசாயிகளுக்கு ஆட்டுபட்டி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த செயல் விளக்கமும் அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் சு. முத்துச்சாமி, கடந்த 6 மாதத்தில் மிகப்பெரிய அளவில் தெருநாய்கள் ஆடு வளர்ப்போர்க்கு இடையூறாக உள்ளதாகவும், பேரிடர் காலத்தில் மட்டும் தான் உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு கொடுக்க முடியும் என்று உள்ளதாகவும் தெரிவித்தார்.
நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு இல்லை என்றும், இழப்பீடு தொகை வழங்கும் ஆணை கோப்புகள் முதல்வர் கவனத்திற்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நாய்களை பிடிப்பதில் சில சட்டப் பிரச்சனை உள்ளதாகவும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளதாகவும், அவற்றை பின்பற்றி என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம் என்றார்.
தெரு நாய்கள் ஆடுகளை கடிப்பது தவிர்க்க முடியாத வகையிலும், நாய் பட்டியை
தாண்டி போக முடியாத வகையில் இந்த இரும்பு பட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை சோதனை அடிப்படையில் பயன்படுத்தி விட்டு கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு இந்த முறையில் பட்டி அமைக்க அறிவுறுத்த உள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.