தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்! பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை!
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பையொட்டி பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் அனைத்தும் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பையொட்டி பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
"பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறைகள், பிற அறைகள் மற்றும் பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
கற்றல், கற்பித்தல் உபகரணங்கள், கதவு மற்றும் ஜன்னல்கள் தூய்மைப்படுத்தப் பட்டிருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
பள்ளிக் கட்டடத்தின் மேற்பரப்பில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி மழைநீர் வடிந்து ஓடுவதற்கான பாதையை சரிசெய்ய வேண்டும்.
குடிநீர்த் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அனைத்தையும் தூய்மை செய்ய வேண்டும். சமையலறை, சமையல் பாத்திரங்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வளாகத்திலோ அல்லது வகுப்பறைகளிலோ தேவையற்ற பயன்பாடற்ற பொருட்கள் இருப்பின் அப்புறப்படுத்த வேண்டும். கழிவுநீர்த் தொட்டிகள், மூடப்பட்டு பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தல் 2024: ராஞ்சியில் மகளிர் ஹாக்கியை மையப்படுத்தி அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி!
பழுதடைந்த கட்டங்கள் அல்லது உடைந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர் ஏதேனும் இருப்பின், அத்தகைய கட்டங்களை மாணவர்கள் அணுகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளியில் உள்ள அனைத்து மின்சாதனங்கள் மற்றும் மின்சுவிட்சுகள் நன்முறையில் செயல்படுகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வளாகத்தினுள் அமைந்துள்ள மரங்களில் ஒடிந்த கிளைகள் மற்றும் கட்டங்களுக்கு இடையூறாக அமைந்துள்ள கிளைகளை அகற்ற வேண்டும்"
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.