"விமானங்களில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை"- மக்களவையில் கலாநிதி வீராசாமி கோரிக்கை!
விமானப் பயணத்தின் போது தமிழிலும் அறிவிப்புகள் செய்ய வழியுறுத்தி வடசென்னை கலாநிதி வீராசாமி எம்.பி மக்களவையில் பேசினார்.
நாடாளுமன்றத்தில் விமானப் பயண கட்டணத்தை ஒழுங்குபடுத்த வகை செய்யும் வகையில் ஒரு தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதாவின் விவாதத்தில் பங்கேற்று கலாநிதி வீராசாமி எம்.பி பேசியதாவது,
“இந்த விவாதத்தில் பங்கேற்று எனக்கு முன்பு பேசிய பல மூத்த உறுப்பினர்கள் விமான பயண கட்டணம் நிர்ணயிப்பதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். அந்தக் கருத்தை நானும் வரவேற்கின்றேன். அதனை ஒட்டி எனது கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். விமானப் பயண கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதை கண்காணிப்பதற்காக ஒரு அமைப்பினை உருவாக்க வேண்டும். இந்த அமைப்பு ஒரு சுதந்திரமான அமைப்பாக இருக்க வேண்டும். இது விமானப் பயணிகளின் நலன் காக்கும் அமைப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றேன்.
விமானங்களில் அடிக்கடி பயணம் செய்யும் பிரயாணிகளாக உள்ள நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட இக்குழுவில் பங்கேற்று வழி செய்யலாம். எனக்கு முன்பு பேசிய உறுப்பினர் மஹதப் அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் புள்ளிகள் மிக அதிக அளவில் அவரிடம் இருந்தாலும், அதை முறைப்படி பணமாகவோ அல்லது வேறு சலுகைகளாகவோ தன்னால் மாற்ற இயலவில்லை என்று கூறினார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பயணிகளின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.
விமானப் பயணங்களின் போது ஏற்படும் முக்கியமான கஷ்டம் யாதெனில் அடிக்கடி விமான சேவைகள் நிறுத்தப்படுவதாகும். காலநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திடீரென்று விமானங்கள் பயணத்தை ரத்து செய்யும்போது பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சுற்றுலா பயணிகள் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தங்கள் சொந்த ஊரிலிருந்து மிகத் தொலைவிலுள்ள சுற்றுலா தலங்களுக்குப் பயணம் செய்து விட்டு திரும்பும் போது விமானங்கள் ரத்து செய்யப்படுமானால் அத்தகைய சுற்றுலா பயணிகளின் நிலை என்னவாகும்?
ஆனால் விமான நிறுவனமோ அவர்கள் அடுத்த விமானத்தில் பயணம் செய்யும் நேரம் வரை தங்குவதற்கோ, ஏன் உணவு வழங்குவதற்குக் கூட ஏற்பாடு செய்து தருவதில்லை. மேலும் விமானங்கள் பயணத்தை ரத்து செய்யும்போது பயணிகளின் டிக்கெட் கட்டணம் கூட ஆன்லைன் மூலம் தான் திருப்பித் தர முடியும். ஏனெனில் பொதுவாக, டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் தான் திருப்பித் தர முடியும் என்று சொல்கின்றனர். கடந்த வாரத்தில் லட்சத்தீவுகளின் தலைநகர் அகாட்டிக்குச் சென்ற கேரளப் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டதால் பெரும் ஆவதிக்குள்ளாகின்றனர். இவ்வாறு ரத்து செய்தது அலையன்ஸ் ஏர் நிறுவனம் என்று கருதுகின்றேன். சுமார் 100 பயணிகள் இவ்வாறு அங்கு மாட்டிக்கொண்டனர்.
மேலும் சமீபத்தில் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டதால் பெரும் அவதிக்குள்ளாயினர். அங்கும் அலையன்ஸ் ஏர் நிறுவன விமானம் தான் ரத்து செய்யப்பட்டது. ஆனால், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஒருவர் கூட கண்ணில் படவில்லை என்றும், அந்த நிறுவனம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு எவ்வித உதவியும் செய்து தரவில்லை என்றும் பயணிகள் தெரிவித்தனர்.
அடுத்ததாக, அதிமுக்கியமான ஒரு பிரச்னையைக் குறிப்பிட விரும்புகின்றேன். முன்னாள் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சரும் தற்போது இந்த அவையில் உள்ளார். அவரிடம் ஏற்கனவே நான் எழுப்பி இருந்த கோரிக்கையைத் தற்போதைய அமைச்சருக்கும் தெரிவிக்க விரும்புகின்றேன். சர்வதேச விமான நிறுவனங்கள் இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுப்தான்சா முதலான விமான நிறுவனங்கள் தென் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் தங்கள் விமானங்களை இயக்கும் போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் அறிவிப்புகளை சொல்கின்றன.
ஆனால் நம் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் அறிவிப்புகள் செய்கின்றன. தற்காலத்தில் விமானத்தில் பயணம் செய்பவர்கள் அதிகரித்து வரும் வேளையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளை அறியாதவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விமான போக்குவரத்துத்துறை அமைச்சரின் பரிசீலனைக்கு நான் எனது இந்த கோரிக்கையைச் சமர்ப்பிக்கின்றேன். அவர் தக்க நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கின்றேன்.
மேலும் புதிய விமான நிலையங்கள் அமைப்பது குறித்து நான் வேண்டுகோள் விடுப்பது யாதெனில் சென்னை அருகே பரந்தூர் மற்றும் ஓசூரில் விமான நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும் சேலத்தில் உள்ள விமான நிலையத்தின் ஓடுதளத்தை நீட்டிக்க அதாவது சர்வதேச விமானங்கள் இயக்குவதற்கு வசதியாக ஓடுதளத்தின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்”
இவ்வாறு கலாநிதி வீராசாமி எம்.பி பேசினார்.