"மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்க கூடாது" - நவீன் பட்நாயக் உரை
மத்திய அரசு நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள்தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும் என்பதால், தமிழ்நாடு போன்ற மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதனையடுத்து, கடந்த 5ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 58 கட்சிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கை குழுவை அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி கடிதம் எழுதினார். மேலும், தொகுதி மறுவரையரை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுவரையரை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் காணொலி வாயிலாக பங்கேற்றார்.
அப்போது, நவீன் பட்நாயக் பேசியதாவது,
"மாநிலங்களின் ஜனநாயக உரிமையை காப்பதற்கான, பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான மிக முக்கியமான கூட்டம் இது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரை செய்வது சரியாக இருக்காது.
இது மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அளிக்கப்படும் அநீதி. மாநில உரிமைகளை பறிக்கும் செயல்களிலையே மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. தென்மாநிலங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டிருக்கும்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தண்டிக்க கூடாது. இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை ஏற்பாடு செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி"
இவ்வாறு ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.