லடாக்கிற்கு மாநில அந்தஸ்து: 21 நாட்கள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் சோனம் வாங்சுக்!
லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி 21 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், தனது போராட்டத்தை நேற்று நிறைவு செய்தார்.
லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது போராட்டத்திற்கு ஆதரவாக ஏராளமான மக்கள் திரண்டனர். இந்நிலையில் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை 21-வது நாளான நேற்று முடித்துக் கொண்டார்.
பின்னர் பேசிய அவர், முதற்கட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் முடிவடைவதாகவும், ஆனால் தனது போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார். இந்த உண்ணாவிரதத்தின் முடிவு, போராட்டத்தின் புதிய கட்டத்தின் தொடக்கம் என்றும் வாங்சுக் குறிப்பிட்டார்.
மேலும், அவர் லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதிய வேண்டுகோளை முன்வைத்தார். மேலும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குரிமையை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.