ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து... #OmarAbdullah தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்!
உமர் அப்துல்லா தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில், மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி 48 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றன. இதையடுத்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 4 சுயேச்சைகளும், ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏ-வும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் கூட்டணியின் பலம் 54 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாவும், அக்கட்சியின் மூத்த தலைவர் சுரேந்தர் குமார் சவுத்ரி துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.
இந்நிலையில் உமர் அப்துல்லா தலைமையில் நேற்று முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜம்மு- காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் வரைவை டெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் உமர் அப்துல்லா வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.