'நம்ம ஸ்கூல்.. நம்ம ஊருப் பள்ளி' திட்டத்திற்கு #StateBankofIndia ரூ1.37 கோடி நிதியுதவி!
அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தொடங்கப்பட்ட 'நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி' திட்டத்திற்கு ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா ரூ. 1.37 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை மூலம் பல்வேறு புதிய செயல் திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை நாட்டிற்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றன. அதில் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரும் பங்களிப்பை செலுத்தும் வகையில் "நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி" என்ற திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்டங்களில் அமைந்துள்ள மொத்தம் 30 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா ரூ. 1.37 கோடி நிதி உதவியளித்துள்ளது. இதற்கான காசோலையை மாநில ஒருங்கிணைப்பாளர் காயத்ரியிடம் ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் வினய் எம் தான்சே வழங்கினார்.
இதையும் படியுங்கள் : Thalapathy69 : ‘One Last Time’ – தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்!
இந்த நிதியின் வாயிலாக 23 மாவட்டங்களில் உள்ள 30 அரசுப் பள்ளிகளில் கணினிகள், மேசைகள், இருக்கைகள் வசதி , சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சூரிய ஒளி மின்கலன்கள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இது தொடர்பாக வினய் எம் தான்சே கூறியதாவது:
’"நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளியின் வாயிலாக சமூகநலன் கருதி மாணவர்களின் வளர்ச்சிக்காக பங்களிப்பதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெருமிதம் கொள்கிறது இது ஒரு தொடக்கப் புள்ளியே தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் இத்திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பங்களிப்போம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.