நாட்டிலேயே முதன்முறையாக "மாநில மகளிர் கொள்கை" - தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்!
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் சட்டப் பேரவைக் கூட்டம் கூட உள்ள நிலையில், ஜனவரி 23-ம் தேதியான இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவையின் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 2-வது வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில் விரைவில், மக்களவை தேர்தலும் அறிவிக்கப்பட உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசும் வரும் பிப்ரவரி மாதத்திலேயே தனது 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாட்டில் உள்ளது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல், சட்டமன்ற கூட்டத் தொடரை எப்போது கூட்டுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரவை கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மாநில அளவில் மகளிர் கொள்கை வகுத்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்பது குறிப்பிடத்தக்கது.