"நீட் தேர்வு வேண்டாம்" - மாநில கல்விக்கொள்கையின் பரிந்துரைகள் முதலமைச்சரிடம் சமர்பிப்பு!
நீட் தேர்வு வேண்டாம் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை கொண்ட மாநில கல்விக் கொள்கை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்து, மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்தது. குறிப்பாகத் தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் குழு அமைக்கப்பட்டது. குழுவின் தலைவராக டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் நியமிக்கப்பட்டார். இக் குழுவானது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு இணைந்து கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கையை தயாரித்துள்ளது. இதனை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் குழுவினர் சமர்பித்தனர்.
இதையும் படியுங்கள் : “விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகள்” – தமிழ்நாடு விண்வெளி தொழிற்கொள்கை வெளியீடு!
மாநில கல்விக்கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
- "மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கான பொது தேர்வுகள் இருக்கக்கூடாது.
- நீட் தேர்வு இருக்கக்கூடாது.
- கல்லூரி சேர்க்கையின்போது 12ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன் 11ஆம் வகுப்பு மதிப்பெண்களும் இடம்பெற வேண்டும்.
- எம்ஜிஆர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்களாக அமைக்க வேண்டும்.
- கல்லூரி முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
- சிபிஎஸ்சி, Deemed University அகியவற்றிக்கான கட்டணங்களை சீரமைபதற்காக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.
- 5 வயது பூர்த்தியாளர்கள் 1-ம் வகுப்பில் சேரலாம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும்
- 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர வேண்டும்."
இது போன்ற பல்வேறு அம்சங்கள் மாநில கல்விக்கொள்கை பரிந்துரையில் இடம்பெற்றுள்ளன.