நடுவானில் வெடித்துச் சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலம்!
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் விண்கலங்களை அனுப்பி சோதனை செய்து வருகிறது. அந்த வகையில், புதிய மேம்படுத்தப்பட்ட விண்கலத்துடன் ஸ்டார்ஷிப் ராக்கெட் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, நேற்று (ஜன.16) விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்கலம் பறக்கத் தொடங்கிய 8.5 நிமிடங்களில் கட்டுப்பாட்டு மையத்துடன் உள்ள தொடர்பை இழந்தது. சிறிது நேரத்தில் விண்கலம் நடுவானில் வெடித்து சிதறியது. விண்கல குப்பைகள் பூமியை நோக்கி விழும் காட்சிகளை விமானத்தில் இருந்தவாறு மக்கள் வீடியோவாக பதிவு செய்தனர்.
எரிபொருள் கசிவினால், என்ஜின் பயர்வாலுக்கு மேலே உள்ள குழியில் அழுத்தம் உருவாகியிருக்கலாம் என்று முதற்கட்ட தரவுகள் தெரிவிப்பதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். விண்கலம் வெடித்து சிதறியது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு மேலாளர் டான் ஹூட் கூறுகையில், ”அனைத்து தரவுகளையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். எங்கு தவறு நடந்துள்ளது என்பதை கண்டறிய சிறிது காலம் எடுக்கும்” என தெரிவித்தார்.