ஸ்டார்க் அபாரம்... சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் பொரேல் 49 ரன்களும், கேஎல் ராகுல் 38 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும், மகீஷ் தீக்ஷனா, ஹசரங்கா தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். இதனையடுத்து 189 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன் களமிறங்கினர். இதில் சஞ்சு சாம்சன் 31 ரன்களில் காயம் காரணமாக வெளியேறினார். அடுத்து வந்த ரியான் பராக் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நிதிஷ் ராணாவுடன் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார். அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் 51 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் ஆடிய நிதிஷ் ராணாவும் 51 ரன்களில் வெளியேறினார்.
இறுதி ஓவரில் 6 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில், துருவ் ஜுரேல் - ஹெட்மேயர் களத்தில் இருந்தனர். இதனையடுத்து கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டபோது, மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை எதிர்கொண்ட துருவ் ஜுரேல் 2 ரன்களுக்காக ஓடியபோது ரன் அவுட் ஆனார். இதன்படி 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது. இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் போடப்பட்டது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் ஹெட்மேயர் - ரியான் பராக் களமிறங்கினர். சிறப்பாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராஜஸ்தான் அணி 11 ரன்கள் எடுத்த நிலையில், 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணி சார்பில் சூப்பர் ஓவரில் ஸ்டப்ஸ் -கே.எல்.ராகுல் களமிறங்கினர். இந்த ஜோடி 4 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.