குமரி திருவள்ளுவர் சிலை பதிவேட்டில் பிரதமர் மோடி எழுதியது என்ன?
திருவள்ளுவரின் காலடியில் நிற்பது ஒரு சிறந்த அனுபவம் என பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு 3 நாட்கள் தியானம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதியம் தியானத்தை நிறைவு செய்தார். விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.பின்னர், அங்குள்ள வருகை பதிவேட்டில் பிரதமர் நரேந்திர மோடி சில குறிப்புகளை எழுதினார். அதில் திருவள்ளுவர் சிலையின் காலடியில் நிற்பது ஒரு சிறந்த அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இலக்கியம் மற்றும் தத்துவவியலின் உச்சமாக இருப்பவர் திருவள்ளுவர். வாழ்வியல், சமூகம், கடமை, தர்மம் ஆகியவற்றை குறித்து திருக்குறளில் கூறப்பட்டுள்ள ஆழமான கருத்துகள் உலகமெங்கும் மக்களின் இதயங்களை வென்றுள்ளது” என்று எழுதியுள்ளார்.
இதையும் படியுங்கள் : "மகளை பறிகொடுத்ததால் இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை"– இளையராஜா பேட்டி!
பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச மன்றங்களில் திருக்குறளில் இருந்து மேற்கோள்காட்டி அதன் மொழிபெயர்ப்புகளை பல்வேறு மொழிகளில் வெளியிடும் பாக்கியம் தனக்கு கிடைத்ததாகவும், வள்ளுவரின் பணியில் இருந்து பெரும் உத்வேகம் கிடைப்பதாகவும், இன்று உலகளாவிய தீர்வுகளை வெளிப்படுத்துவதில் இந்தியாவின் பங்கை உலகமே உற்று நோக்கும் இத்தகைய நேரத்தில், வள்ளுவரின் போதனைகள் சிறந்த பங்கு வகுப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.