#SrilankaElection மெட்டா மற்றும் TikTok தளங்களில் விளம்பரம் - கோடிக் கணக்கில் செலவு செய்த அரசியல் கட்சிகள்!
இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் மெட்டா மற்றும் டிக்டாக் தளங்களில் விளம்பரம் செய்ய அரசியல் கட்சிகள் கோடிக்கணக்கான பணம் செலவழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சியை பறிகொடுத்தது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதன் எதிரொலியாக அதிபர் பதவியை ராஜினாமா செய்த கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறினார்.
அதன் பின்னர் இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது.எனவே இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய செப்டம்பர் 21-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்தது.அதன்படி இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை மக்கள் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் 75 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்கு எண்ணிக்கையையொட்டி நாளை காலை 6 மணி வரை இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகளும் அதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வந்தன. இதில், இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசாநாயகே முன்னிலை வகித்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசாநாயக அபார வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் நாளை இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
இலங்கை தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக அரசியல் கட்சிகள் பல உத்திகளை கையாண்டுள்ளன. தங்களது பிரசாரங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை டிஜிட்டல் தளங்களில் பயன்படுத்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளது. இலங்கை கார்டியன் பத்திரிகை மெட்டா விளம்பர தரவுகளை சுட்டிக்காடி செய்திகளை வெளியிட்டுள்ளது.
இந்த அதிபர் தேர்தலில் மெட்டா தளத்தில் அரசியல் விளம்பரங்களுக்காக மட்டும் 422 மில்லியன் இலங்கை ரூபாய் செலவிடப்பட்டதாகக் தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் 10கோடிக்கு மேல் ஆகும். இதேபோல முன்னாள் அதிபர் விக்கிரமசிங்கவின் டிக் டோக் வீடியோக்களுக்காகவும் கணிசமான தொகை செலவிடப்பட்டதாக ஆதாரங்களை வெளியாகியுள்ளன.