குழந்தையின் வயிற்றில் சிக்கிய எல்இடி பல்ப் - அறுவை சிகிச்சையின்றி அகற்றிய மருத்துவர்கள்!
5 வயது குழந்தையின் வயிற்றில் சிக்கிய எல்இடி பல்பை, எந்தவித அறுவை சிகிச்சையுமின்றி அகற்றியுள்ளனர் சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வயது குழந்தையின் வயிற்றில் எல்இடி பல்ப் சிக்கியுள்ளது. குழந்தையின் வயிற்றில் இருந்த அந்த பல்பினை எந்தவித அறுவை சிகிச்சையுமின்றி நுட்பமான முறையில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
அறுவை சிகிச்சையின்றி பல்பு அகற்றப்பட்டதால், சிகிச்சை நிறைவடைந்த ஓரிரு நாள்களில் அந்த குழந்தை வீடு திரும்பியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவமனையின் குழந்தைகள் நல அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் ஆர்.மது கூறியதாவது;
“திருவள்ளூர் மாவட்டம் பிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 5 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அக்குழந்தை விளையாடும்போது எல்இடி பல்பை தவறுதலாக விழுங்கியுள்ளது. மொத்தம் 5 செ.மீ. நீளமும், 2 செ.மீ விட்டமும் கொண்ட அந்த பல்பானது குழந்தையின் நுரையீரலில் சிக்கிக் கொண்டது.
இதனால் தீவிர மூச்சுத் திணறல், இருமல் போன்றவற்றால் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. வேறு ஒரு மருத்துவமனையில் சுவாசப் பாதையில் குழாய் செலுத்தி பரிசோதிக்கும் 'ப்ராங்கஸ்கோபி' எனப்படும் முறை மூலம் அந்த பல்பினை எடுப்பதற்கு இரு முறை முயற்சி செய்யப்பட்டது.
அவை பலனளிக்காததால் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு விருப்பம் தெரிவிக்காத பெற்றோர், ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ் அகர்வால், மயக்கவியல் மருத்துவத் துறை தலைவர் டாக்டர் அருணா பரமேஸ்வரி ஆகியோருடன் இணைந்து 'ப்ராங்கஸ்கோபி' முறை மூலம் பல்பை வெளியே எடுக்க நாங்கள் முயன்றோம்.
ஏறத்தாழ ஒன்றரை மணி நேர சிகிச்சையின் பிறகு சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு எந்த சேதமும் இன்றி பல்ப் வெளியே எடுக்கப்பட்டது. இந்த நுட்பமான சிகிச்சையால் குழந்தைக்கு தீவிர மருத்துவக் கண்காணிப்போ, செயற்கை சுவாசமோ தேவைப்படவில்லை. அதுமட்டுமன்றி குழந்தையின் பெற்றோரின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு அந்த சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது” என்றார்.