குளித்தலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழா! - திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!
குளித்தலை அருகே ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் மதுரை வீரன்
கோயிலில் வைகாசி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குமாரமங்கலத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ
பகவதி அம்மன், மற்றும் மதுரை வீரன் உள்ளிட்ட பரிவார கோயில்கள் அமைந்துள்ளது. இந்த கோயிகளில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு வைகாசி மாத திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த வைகாசி திருவிழாவை முன்னிட்டு, கடந்த 24ம் தேதி காலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீர்த்த குடம் எடுத்து வந்தனர்.
இதையும் படியுங்கள் : பராமரிப்பு பணிகள் : சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை ரயில்கள் இந்த நேரத்தில் இயங்காது!
இதனைத் தொடர்ந்து கடந்த 26ம் தேதி இரவு கரகம் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், நேற்று (மே-27ம் தேதி) காலை கரகம் திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக பால்குடம், அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி, இருவர் அம்மன்வேடம் அணிந்து நடனமாடி ஊர்வலமாக கோயிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பக்தர்கள் கோயிலில் அங்க பிரதட்சணம் செய்து, நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். இந்த வைகாசி மாத திருவிழாவில் கருர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.