பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது... கவுரவித்த அதிபர் அநர குமார திசநாயக!
பிரதமர் மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடைபெற்ற ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் இலங்கை புறப்பட்டார். தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையின் மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழு பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றது.
அண்டை நாடான இலங்கையில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்த வகையில், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகாவை இன்று (ஏப்.5) பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இந்தியா - இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிப்புமிக்க மித்ர விபூஷணா விருதை வழங்கி இலங்கை அதிபர் கெளரவித்தார்.
பின்னர் இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதில் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவாக்குவது குறித்து அவர்கள் விவாதிக்க உள்ளனர். பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியா – இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கைெயழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே முதல் முறையாக ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.