சூடுபிடிக்கும் #SriLanka தேர்தல் களம் - ரணில் விக்ரசிங்கவுக்கு பெருகும் ஆதரவு!
கடந்த 2022ல் இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள்கூட கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் அல்லல்படும் அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு மக்கள் தீவிரப் போராட்டங்கள் நடத்தியதன் தொடர்ச்சியாக அதிபர் பதவியை விட்டு ராஜிநாமா செய்தார் கோத்தபய ராஜபக்ச.
இந்த சூழலில் இலங்கையில், வரும் செப்.21ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. பொருளாதார நெருக்கடிக்குபின் நடக்க உள்ள முதல் அதிபர் தேர்தலான இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் போட்டியிடுகிறார். இதேபோல், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ஏற்பதற்கான காலக்கெடு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.
இந்தத் தோ்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 38 போ் போட்டியிடுகின்றனா். இந்த நிலையில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரசிங்கவுக்கு ஆதரவு பெருகி உள்ளது. அதாவது, ராஜபட்ச சகோதரா்களின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியிலிருந்து பிரிந்த அணி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி ரணில் விக்ரசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.