For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இலங்கை இறுதிகட்ட போரில் காணாமல் போன ஈழத்தமிழர்கள் குறித்து துரித விசாரணை மேற்கொள்ள வேண்டும் - ஐ.நா மனித உரிமை ஆணையம் உத்தரவு!

09:15 PM May 17, 2024 IST | Web Editor
இலங்கை இறுதிகட்ட போரில் காணாமல் போன ஈழத்தமிழர்கள் குறித்து துரித விசாரணை மேற்கொள்ள வேண்டும்   ஐ நா மனித உரிமை ஆணையம் உத்தரவு
Advertisement

இலங்கையில் இறுதிகட்ட போர் நடைபெற்ற காலகட்டம் மற்றும் அதற்கு பிறகும் காணாமல் போன ஈழத்தமிழர்கள் குறித்து துரித விசாரணை மேற்கொள்ள வேண்டும் ஐ.நா மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்திற்கும்,  விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இடையில் இறுதிப்போர் நடைபெற்றது. இந்தப் போரில் எல்டிடிஈ அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக  இலங்கை அரசு அறிவித்தது.  இந்த போரின் போது இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்ததாகவும், இந்த போரின் போது ஏராளமானோர் காணாமல் போனதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

போருக்குப் பின்னரும் ஈழத்தமிழர்கள் வசித்த இடங்களை இலங்கை ராணுவம் ஆக்கிரமிப்பு செய்ததுடன், இளைஞர்களைப் பிடித்துச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்த நிலையில்  இறுதிப்போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இன்று  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது..

"இலங்கை இறுதிப் போரிலும், போருக்குப் பிறகும் காணாமல் போன ஈழத்தமிழர்கள் பற்றிய விசாரணையை வேகப்படுத்த வேண்டும். அத்துடன் போரில் காணாமல் போனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசுப் படைகளுக்கும் தொடர்பு உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு இலங்கை அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும். மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.

இதுதொடர்பான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியில் சீர்திருத்தங்களை இலங்கை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சர்வதேச விதிமீறல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை துரித கதியில் நிறுவ வேண்டும். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் இலங்கை அரசின் உயர் பதவிகளில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது. அப்படித் தொடர்புடையவர்களை பெரிய பதவிகளில் நியமிக்கவும் கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement