இலங்கை-இந்தியா இடையே பாலம் | இறுதிக் கட்டத்தை எட்டிய ஆய்வுப் பணிகள்!
இலங்கை-இந்தியா இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.
சுற்றுலாவையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னார் இடையே கடலில் 23 கி.மீ. தொலைவுக்கு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கை-இந்தியா இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.
இலங்கையின் வடகிழக்கு மாவட்டமான மன்னாரில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க நேற்று அங்கு சென்றிருந்தார். அப்போது, செய்தியாளா்களிடம் பேசிய அவா், "இலங்கை-இந்தியா இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகள் விரைவில் நிறைவடையும்" என்றாா்.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பிரதமா் மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றாா். இதனிடையே, இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வரும் 20ம் தேதி இலங்கை வரவிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் இதுவரை அதிகாரபூா்வ தகவல் வெளியிடப்படவில்லை.