SRHvsGT | சிராஜ் வேகத்தில் சரிந்த விக்கெட்டுகள், குஜராத் அணிக்கு 153 ரன்கள் இலக்கு!
நடப்பாண்டு ஐபிஎல் லீக் சுற்றில் இன்று(ஏப்ரல்.06) பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதரபாத் அணி ஷுப்பன் கில் தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொண்டு வருகிறது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஹைதரபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 18 ரன்களும், ஹெட் 8 ரன்களும் அடித்து முகமது சிராஜிடம் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து வந்த இஷான் கிஷான் 17 ரன்களில் பிரசித் கிருஷ்ணாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து ஹென்ரிச் கிளாசென் - நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இணைந்து சிறிது நேரம் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தனர். இதில் கிளாசென் 27 ரன்கள் அடித்து சாய் கிஷோரிடம் விக்கெட்டை இழந்தார். இதற்கிடையில் வந்த அனிகேத் வர்மா , கமிந்து மெண்டிஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நிதிஷ் குமார் ரெட்டியின் விக்கெட்டை 31 ரன்களில் சாய் கிஷோர் தட்டித் தூக்கினார்.
இறுதியாக வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் சில பவுண்ரிகளையும் சிக்சர்களையும் விளாசி 22* ரன்கள் அடித்தார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த ஹைதரபாத் அணி 152 ரன்கள் எடுத்திருந்தது. குஜராத் அணியில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 153 ரன்களை குஜராத் அணி சேஸிங் செய்ய உள்ளது.