“NEP-ல் இந்தி திணிக்கப்படுவதாக பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி” - பவன் கல்யாண்!
புதிய தேசிய கல்விக் கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு எதிர்த்து வருகிறது. இது நாடு முழுவதும் அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இந்த சூழலில் நேற்று(மார்ச்.14) நடைபெற்ற ஜனசேனா கட்சியின் நிறுவன நாளில் அக்கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு தமிழ் உட்பட பல மொழிகள் தேவை என்றும் இந்தி வேண்டாம் என்றால், நிதி ஆதாயத்திற்காக ஏன் தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவரின் பேச்சுக்கு கனிமொழி எம்.பி, நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் இந்தி திணிப்புக்கு எதிரான அவரின் பழைய பதிவுகளை சுட்டிக்காட்டி பதிலளித்தனர்.
இந்த நிலையில் தனது இந்தி திணிப்புக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என பவன் கல்யாண் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஒரு மொழியை வலுக்கட்டாயமாகத் திணிப்பதோ அல்லது ஒரு மொழியை குருட்டுத்தனமாக எதிர்ப்பதோ நமது தேசிய மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பின் நோக்கத்தை அடைய உதவாது. இந்தியை மொழியை நான் ஒருபோதும் எதிர்த்ததில்லை. திணிப்பை மட்டுமே எதிர்த்தேன்.
புதிய தேசிய கல்விக் கொள்கையில் இந்தியை திணிக்காதபோது, திணிக்கப்படுவதாக தவறான கதைகளைப் பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி. புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவர்கள் வெளிநாட்டு மொழியுடன் எந்த இரண்டு இந்திய மொழிகளையும் (அவர்களின் தாய்மொழி உட்பட) கற்றுக்கொள்ளாம். அவர்கள் இந்தி படிக்க விரும்பவில்லை என்றால், அவர்கள் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, அஸ்ஸாமி, காஷ்மீரி, ஒடியா, பெங்காலி, பஞ்சாபி, சிந்தி, போடோ, டோக்ரி, கொங்கனி, மைதிலி, மெய்தி, நேபாளி, சந்தாலி, உருது அல்லது வேறு எந்த இந்திய மொழியையும் தேர்வு செய்யலாம்.
பல மொழி கொள்கை மாணவர்களுக்கு விருப்பத்தேர்வுகளை வழங்கவும், தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கவும், இந்தியாவின் வளமான மொழியியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசியலுக்காக இந்தக் கொள்கையை தவறாகப் புரிந்துகொண்டு நான் எனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகக் கூறுவது புரிதலின்மையை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் மொழியியல் சுதந்திரம் மற்றும் கல்வித் தேர்வு என்ற கொள்கையில் ஜனசேனா கட்சி உறுதியாக நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளர்.