பரவி வரும் Deep Fake வீடியோ: வேதனையை பகிர்ந்த ராஷ்மிகா!
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து வேதனையுடன் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பாலிவுட் திரை உலகிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக அமிதாப்பச்சன் நடித்த ’குட்பை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஷ்மிகா ’புஷ்பா 2’ ’அனிமல்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து மார்பிங் செய்த, வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ போலியாக மார்பிங் செய்யப்பட்டது என்பதை கண்டறிந்து ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில், deep fake தொடர்பான விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. இந்தியாவில் deep fake-ஐ கையாள்வதற்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பின் அவசரத் தேவை உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா முதல்முறையாக சமூக வலைதளத்தில் இந்த வீடியோ சர்ச்சை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தெரிவித்ததாவது:
”இந்த பதிவை பகிர்வதில் நான் மிகவும் வேதனைப்படுகிறேன். மேலும் நான் ஆன்லைனில் பரப்பப்படும் Deep Fake வீடியோவைப் பற்றி பேச வேண்டும். இதுபோன்ற ஒன்று, எனக்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும், தொழில்நுட்பம் இவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுவதால் விளையும் தீங்கு குறித்து மிகவும் பயமாக உள்ளது.
இன்று, ஒரு பெண்ணாகவும், ஒரு நடிககையாகவும், எனது பாதுகாப்பு மற்றும் ஆதரவு அமைப்பாக இருக்கும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நான் பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இது நடந்தால், இதை எப்படி சமாளிப்பது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது.
இதுபோன்ற அடையாளத் திருட்டால் நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படுவதற்கு முன், இதற்கான தீர்வு காண வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.