அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை - #SFI போராட்டம்!
ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையைக் கண்டித்து சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மகாவிஷ்ணு என்பவர் 2 அரசு பள்ளிகளில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில், முழுக்க முழுக்க ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படியுங்கள் : பாலியல் புகார் – புதிய ஆதாரங்களை வெளியிட்ட #NivinPauly தரப்பு!
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசியிருக்கிறார். யாருடைய அனுமதியில் இது போன்ற சொற்பொழிவாளரை அரசு பள்ளிகளுக்குள் அனுமதித்தார்கள் என ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசு பள்ளிகளில் மகாவிஷ்ணு என்ற நபர் மூலம் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்டது தமிழ்நாடு கல்வித்துறையிலும், தமிழ்நாடு அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இன்று காலை அந்த பள்ளியின் முன் கூடினர். மேலும், மூடநம்பிக்கையை வளர்க்கும் இது போன்ற நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்தது யார் என்று கேள்வி எழுப்பிய அவர்கள், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.