டங்ஸ்டன் எதிர்ப்பு பதாகைகளுடன் ஜல்லிக்கட்டை ரசிக்கும் பார்வையாளர்கள்!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி, அ.வல்லாளப்பட்டி, நாயக்கர் பட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் டங்ஸ்டன் எடுப்பதற்கான குத்தகை ஏல உரிமையை இந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய சுரங்கதுறை அமைச்சகம் கொடுத்தது. தொடர்ந்து அந்நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தியது.
இந்த சுரங்க திட்டம் வந்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சமீபத்தில் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் இணைந்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பேரணியில் ஈடுபட்ட 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்பு இந்த வழக்குகள் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மூர்த்தி பேசியிருந்தார். இதனிடையே சட்டப்பேரவையில் இத்திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மதுரையில் நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பதாகை ஏந்தி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பாலமேட்டில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சிலர் ‘save அரிட்டாபட்டி Tungsten Mining’ என்ற வாசக பலகையோடு ஜல்லிக்கட்டைப் பார்வையிட்டு வருகின்றனர்.