தமிழ் எழுத்து வடிவில் அமர்ந்து மாணவர்கள் நிகழ்த்திய கண்கவர் நிகழ்ச்சி - வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு!
திருச்சியில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் தமிழ் எழுத்துகளாக மைதானத்தில் அமர்ந்து புத்தகம் வாசிப்போம் என உறுதிமொழி எடுத்தது கண் கவர் நிகழ்வாக அமைந்தது.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பாகவும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள்
சார்பாகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் கண்காட்சி வருடம் தோறும்
நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் வருகிற 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 4ம்தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இதற்கு முன்னேற்பாடு நிகழ்ச்சிகளாக அனைத்து பள்ளிகளிலும் தமிழ் எழுத்துக்கள் வடிவில் மாணவர்களை அமர வைத்து படிக்க வைத்தல், தமிழ் எழுத்துக்கள் வடிவில் மாணவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பயிற்சிகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த தேனேரிப்பட்டி
அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உயிர் எழுத்துக்கள் வடிவிலும், தமிழ் என்கிற எழுத்து வடிவிலும் மைதானத்தில் அமர்ந்தது கண் கவர் நிகழ்வாக அமைந்தது.
தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ரகுபதி ஏற்பாட்டில்
நடத்தப்பட்ட இந்த கருத்துறு நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்கள் புத்தகக் கண்காட்சியில்
கலந்து கொண்டு ஆர்வமுடன் புத்தகங்களை வாங்குவோம், படிப்போம் என்று உறுதி மொழி
எடுத்துக் கொண்டனர்.