#SpecialTrain | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்றிரவு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்!
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக இன்று (30.10.2024)இரவு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை நாளை (அக்.31) கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. எனவே சென்னையில் தங்கி இருக்கும் வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி விட்டனர். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சுமார் 10 லட்சம் பேர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலரும் கடந்த சனிக்கிழமை முதலே சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர். சென்னையில் இருந்து இன்று (30.10.2024) இரவு வரை ஏராளமான மக்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக 11,176 சிறப்புப் பேருந்துகளை போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. இந்த நிலையில், சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக முழுவதும் முன்பதிவு இல்லா 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த 3 சிறப்பு ரெயில்களும் இன்று (அக்.30) இரவு இயக்கப்படுகிறது. அதன்படி, எழும்பூரில் இருந்து இரவு 9.10 மணிக்கு விழுப்புரம், சிதம்பரம், தஞ்சை, வழியே திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. சென்ட்ரலில் இருந்து இரவு 10.10 மணிக்கு அரக்கோணம், திருப்பத்தூர், திருப்பூர் வழியே கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும், தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர் வழியே திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.