“சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு வந்தே பாரத் ரயில்” -தெற்கு ரயில்வே அறிவிப்பு
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலைக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்து, பக்தர்கள் கோயிலுக்குச் செல்வது வழக்கம். அதிலும், இங்கு கேரள பக்தர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டு பக்தர்களின் கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து, பாதுகாப்பு பணி ஆகியவற்றில் சபரிமலை தேவசம் நிர்வாகம் மற்றும் கேரள மாநில நிர்வாகம் சற்று திணறி வருகிறது. இந்த நிலையில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சிறப்பு வந்தே பாரத் ரயில்களை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரல் - கோட்டயம் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் டிச.15, 17, 22, 24 தேதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் (எண்: 06151) மாலை 4.15 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.
மறுமார்க்கமாக கோட்டயத்தில் இருந்து டிச.16, 18, 23, 25 தேதிகளில் அதிகாலை 4.40 மணிக்கு புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் (எண்: 06152) மாலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் பெரம்பூா், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம் வழியாக இயக்கப்படும். இது போல் காச்சிக்கூடா - கொல்லம் இடையே டிச.18 முதல் ஜன.15-ஆம் தேதி வரை திங்கள்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 07109) இயக்கப்படவுள்ளது. மறுமார்க்கமாக டிச.20 முதல் ஜன.17-ஆம் தேதி வரை புதன்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 07110) இயக்கப்படவுள்ளது.
இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டுக்கு இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.