பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க #SpecialTrain | எங்கே?… எப்போது?…
ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. பொதுவாக எந்தவொரு பண்டிகையாக இருந்தாலும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக, சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று அங்கு தனது உற்றார் உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாடுவார்கள்.
குடும்பத்துடன் செல்வதால் ரயிலில் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணம் செய்ய திட்டமிடுவார்கள். ஏனெனில் கடைசி நேரத்தில் ரயில், பேருந்துகளில் பயணம் செய்ய நினைத்தால் படாத பாடு படவேண்டியிருக்கும். பேருந்துகள், ரயில் நிலையங்களில் நிற்க கூட முடியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் பயணிகள் கூட்டமாகவே இருக்கும். இதனை தவிர்க்கும் விதமாக முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வார விடுமுறையையொட்டி வருவதால் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால், அக்டோபர் 11 மற்றும் 12ஆம் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகைகள் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு, தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி மற்றும் பண்டிகை கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி மற்றும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து அக்டோபர் 8 ஆம் தேதி புறப்பட்டு, தஞ்சை, தேவக்கோட்டை, கோவில்பட்டி வழியாக தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
அதேபோல, கோவை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் அக்டோபர் 6 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று, நாளை ரேனிக்குண்டாவிற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னையில் பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு ரேனிகுண்டாவுக்கு ரயில் சென்றடையும். ரேனிகுண்டாவில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு சென்னை வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.