உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து, நாக் அவுட் சுற்று போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டி நாளை மதியம், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் தொடரை முன்னிட்டு அகமதாபாத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விமானங்களின் கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளது. கிரிக்கெட்டை காண்பதற்காக ரசிகர்கள் ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை செலவழித்து விமானத்தில் வருவதை தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்கள் நாளை காலை அகமதாபாத் சென்று சேரும். இறுதிப்போட்டி முடிந்த பின்பு திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு, டெல்லியை வந்தடையும். இதைப் போலவே மும்பையில் இருந்தும் அகமதாபாத்துக்கு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.