பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
சென்னை, கோவை போன்ற நகரங்களில் கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கி இருப்பவர்கள் பொங்கல், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாவது,
"சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை செல்லும் சிறப்பு ரயில் ஜன.11 (நாளை) மதியம் 3:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில் ஜன.12 ம் தேதி இரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறு நாள் காலை 9:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இவ்விரு ரயில்களும் கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப் பேட்டை, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக இயக்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் ஜன.11 (நாளை) இரவு 11:45க்கு புறப்பட்டு மறு நாள் மதியம் 1:00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கத்தில் ஜன.12 மதியம் 3:30க்கு புறப்படும் சிறப்பு ரயில் மறு நாள் அதிகாலை 2:40க்கு எழும்பூர் செல்லும்.
இந்த இரு ரயில்களும் கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் வழியாக இயக்கப்படும். சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில், ஜன. 11(நாளை) இரவு 9:35க்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:20க்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 12:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறு நாள் அதிகாலை 12:05க்கு தாம்பரம் செல்லும்.
இவ்விரு ரயில்களும் திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப் படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஜன.10) காலை 8:00 மணிக்கு தொடங்கியது"
இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.