#Pushpa2 ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி - படம் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு!
தெலுங்கானாவில் குடும்பத்துடன் புஷ்பா 2 திரைப்படம் பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார் .
இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது. இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நேற்று மாலை ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகள் திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்தது.
புஷ்பா திரைப்படத்தை காண தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தில்குக்ஷ் பகுதியை சேர்ந்த ரேவதி , தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஆர்டிசி கிராஸ் ரோட்டில் உள்ள சந்தியா திரையரங்குக்கு படம் பார்க்க சென்றுள்ளனர் .
அப்போது நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்ததால் பொதுமக்கள் அவரை பார்க்க முண்டியடித்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி மற்றும் அவரது மகன் ஆகியோர் மயக்கமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவனைக்கு அழைத்து சென்ற போது ரேவதி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் . மேலும் ரேவதியின் மகன் ஸ்ரீ தேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .