வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி!
பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பின் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இந்த பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 21ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தொடரில் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல் எதுவும் நடைபெறவில்லை.
இதன் காரணமாக இன்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) எதிராக ராகுல் காந்தி தலைமையில் இந்திய கூட்டணி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காந்தி சிலையிலிருந்து நாடாளுமன்ற அவை நுழைவாயிலான மக்கள் திவார் வரை முழக்கங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.
மேலும் இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், வாக்காளர் திருத்த பணிகள் குறித்து அவையில் விவாதிக்கக்கோரி கோஷமிட்டனர். இதில் சில உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டதுடன், அதுகுறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.