"விடுபட்டவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற அடுத்த மாதம் சிறப்பு முகாம்" - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், "தமிழ்நாட்டை காக்க, தமிழ் மண்ணைக் காக்க முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்று முதல்வர் கூறியது மக்கள் அனைவரும் மனதிலும் பதிந்து விட்டது.
உறுப்பினர் சேர்க்கைக்காக நாங்கள் சொல்லும்போது மக்கள் அனைவரும் இன்முகத்துடன் வரவேற்கிறார்கள். பட்டா கிடைக்கவில்லை, முதியோர் பென்ஷன் கிடைக்கவில்லை என்று மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களுக்கு தேவையான நல்லதை செய்து தருவோம். வானதி சீனிவாசன் மத்திய அரசு தமிழகத்தில் ஹிந்தியை திணிக்கவில்லை என்று கூறுவது தமிழ் மக்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர் கூறுவது தவறு.
அஜித்குமார் லாக்கப் மரணம் நடந்தவுடன் அவர்கள் குடும்பத்தாரை அலைபேசியில் அழைத்து முதலமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் யாரும் கேட்பதற்கு முன்பு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். சம்பவம் நடந்த உடனேயே உரிய நடவடிக்கை எடுத்து உள்ளதால் இறந்தவரின் ஆன்மா சாபம் விடாது, அவரை வாழ்த்தும் ஜெயக்குமார் கூறுவது போல் அஜித்குமார் ஆன்மா எங்களுக்கு சாபம் விடாது.
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் சிறப்பு முகாம் அமைக்கப்படும். எந்த தேதியில் எங்கெல்லாம் முகாம் நடைபெறும் என்பது குறித்து அரசு துறை அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி பொதுமக்களை முகாமிற்கு வரவழைத்து மகளிர் உரிமைத் தொகை தகுதியுடைய அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.