#SpecialBus | தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 14,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து இன்று முதல் 14,000 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கள் ஏற்கனவே அளித்த அறிவிப்பின்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்.28), நாளை (அக்.29) மற்றும் நாளை மறுநாள் (அக்.30) ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களும் சேர்த்து 11,176 பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகளும் ஆக ஒட்டு மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இன்று முதல் நாளை மறுநாள் வரை இயக்கப்படுகின்ற பேருந்துகளில் முன்பதிவில் மொத்தமுள்ள 4,29,870 இருக்கைகளில் 1,31,828 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 30.67 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, பயணிகள் அக்.30 அன்று கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.