ஸ்பெயின் நாட்டு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு!
இந்தியாவிற்கு சுற்றுலாவிற்கு வருகை தந்திருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஜார்கண்ட் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை தொடர்ந்து, ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
ஸ்பெயின் - பிரேசிலைச் சேர்ந்த தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் ஆசியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தனர். பாகிஸ்தான், வங்கதேசம், பூடான் உள்ளிட்ட 66 நாடுகளை வெற்றிகரமாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர்கள் சாலை மார்க்கமாக இந்தியா வந்தடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கடந்த வாரம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் டும்கா மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது 7 பேர் கொண்ட வக்கிர கும்பலால் அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பெண் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தத் தம்பதி கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் வருவதற்கு முன்னர் தென்னிந்தியா, காஷ்மீர், லடாக், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த நிலையில், ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் வன்கொடுமை சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.