SpaDeX ஒருங்கிணைப்பு பணி ஒத்திவைப்பு - இஸ்ரோ தகவல்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயற்கைக்கோள்கள் இணைப்பு பரிசோதனையை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பி வருகிறது. இதனை தொடர்ந்து நிலவு மற்றும் சூரியன் ஆய்வுக்காக விண்கலங்களை அனுப்பி அதிலும் வெற்றி கண்டுள்ளது. இதற்கிடையே விண்வெளியில் இந்தியாவிற்கு என்று தனியாக ஒரு விண்வெளி நிலையம் அமைப்பதற்காக விஞ்ஞானிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த பூர்வாங்கப்பணிகள் வருகிற 2028-ம் ஆண்டுக்குள் நிறுவப்பட உள்ளது. இதற்கான வளர்ச்சி சோதனைகள் நடப்பு ஆண்டிலேயே தொடங்க திட்டமிடப்பட்டு பரிசோதனை பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விண்வெளி நிலையத்தின் இறுதிப்பணி வருகின்ற 2035-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு வைக்கப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது.
இதற்கிடையே 2024 ம் ஆண்டு டிச.30-ந் தேதி பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டில் 'ஸ்பேடெக்ஸ்' திட்டத்தின் கீழ் 2 செயற்கைக்கோள்கள் வெவ்வேறு சுற்றுப்பாதைக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இவற்றை ஒன்றாக இணைக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கிடையே இரண்டு செயற்கைகோள்களை ஒன்றாக இணைக்கும் பணியை இன்று (ஜன.7) நிகழ்த்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த பரிசோதனை செய்யும் நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள்கள் இணைப்பு பரிசோதனையை முதலில் தரை பகுதியில் செய்து பார்த்த பின்னரே விண்ணில் உள்ள செயற்கைக்கோளுக்கு செல்ல முடியும். இந்த பரிசோதனையை முடிக்க ஓரிரு நாட்கள் தேவைப்படுவதால், வருகின்ற 9-ந்தேதிக்கு இந்த பணிகள் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதனை வெற்றிகரமாக முடித்தால் அமெரிக்கா, ரஷியா, சீனாவை தொடர்ந்து 4- வது நாடு இந்தியா என்ற பெருமையை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.