For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு !

விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றது குறித்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.
08:43 AM Mar 14, 2025 IST | Web Editor
விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி   இஸ்ரோ அறிவிப்பு
Advertisement

விண்வெளியில் இந்தியாவின் விண்வெளி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செயல்படுத்த உள்ளது. அத்துடன் சந்திரயான்-4 உள்ளிட்ட திட்டங்களும் பட்டியலில் இருக்கிறது. இந்தத் திட்டங்களுக்காக விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் (ஸ்பேடெக்ஸ்) நவீன தொழில்நுட்ப ஆய்வான 'விண்வெளி டாக்கிங் பரிசோதனை'க்காக இஸ்ரோ 'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என்ற இரண்டு செயற்கைக்கோள்களை கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி விண்ணில் செலுத்தியது.

Advertisement

அதன்பின், பல கட்ட முயற்சிகளுக்குப்பின் 2025 ஜனவரி 16-ம் தேதி விண்ணில் வைத்தே இந்த 2 செயற்கைக்கோள்களையும் ஒன்றாக இணைத்தது. இதன்மூலம் ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளி டாக்கிங் செய்த 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றது.

இதற்கிடையே, விண்வெளியில் ஒன்றாக இணைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள்களை தனித்தனியாகப் பிரித்து ஒன்றிணைக்கும் பணிகளை செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இப்பணி வரும் 15-ம் தேதி தொடங்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்திருந்தார். விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விண்வெளியில் செயற்கைக்கோள்களைப் பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. இதுபற்றி இஸ்ரோ வெளியிட்ட செய்தியில், ஸ்பேடெக்ஸ் டாக்கிங் முறையில் நாம் பயணிப்போம் என தெரிவித்ததுடன், 15 மீட்டர் தொலைவில் இருந்து 3 மீட்டருக்கு செயற்கைக்கோள்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

துல்லிய தன்மையுடன் டாக்கிங் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், செயற்கைக்கோள்களை இணைக்கும் பணி வெற்றியடைந்து உள்ளது. அவற்றை நிலைப்படுத்தும் பணியும் வெற்றி பெற்று உள்ளது. ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள். இந்தியாவுக்கும் வாழ்த்துகள் என இஸ்ரோ குறிப்பிட்டிருந்தது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில்,

"செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த நிகழ்வு மன மகிழ்ச்சியை அளிக்கிறது. வருங்காலத்தில் பாரதீய அந்திரிக்சா நிலையம், சந்திரயான்-4 மற்றும் ககன்யான் உள்ளிட்ட திட்டங்களை எளிதில் மேற்கொள்ள வழியேற்படுத்தும் வகையில் உள்ளது. பிரதமர் மோடியால் தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவானது மன உறுதியை அதிகரிக்கச் செய்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement