அடுத்த 4 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை!
அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொச்சி, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்னும் மூன்று, நான்கு நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. தெற்கு அரபிக்கடல் பகுதி, மாலத்தீவு, கன்னியாகுமரி பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை 4 நாளில் துவங்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் பெய்ததை போன்று மிக வலுவான மழையாக இருக்கும் என்றும், ஜூன் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.