தென்மாவட்ட பேருந்துகளில் கட்டணம் குறைப்பு! ஏன் தெரியுமா?
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 30ம் தேதி திறந்து வைத்தார்.
அதையடுத்து, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும் எனவும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் கோயம்பேடு வரை இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது. தற்போது தென்மாவட்ட முக்கிய நகரங்களுக்கு 164 அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கிளாம்பக்கம் புதிய பேருந்து நிலையம் கோயம்பேட்டில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் முன்னதாகவே இருப்பதால், கிளாம்பக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு விரைவுப் பேருந்துகளில் கோயம்பேட்டிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே முன்பதிவு செய்தவர்களுக்கு நடத்துநர்கள் மூலம் குறைக்கப்பட்ட தொகையை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.