ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா - 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே அரையிறுதிக்கு இந்தியா முன்னேறிய நிலையில், புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் களம் கண்டு வருகின்றன. இந்நிலையில், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஒமர்சாய் 97 ரன்கள் விளாசினார். தென்னாப்பிரிக்காவின் ஜெரால்டு கோட்ஜீ 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையும் படியுங்கள் : நவ.17-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது ‘சித்தா’..!
இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தென்னாப்பிரிக்காவின் வான் டெர் டசென் 95 பந்துகளில் 76 ரன்கள் அடித்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.