மாநிலங்களவை எம்.பியாக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு!
மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
5 முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்த சோனியா காந்தி முதன்முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்வாகியுள்ளார். தற்போது உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் எம்.பி.யாக உள்ள சோனியா காந்தி, கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின் போதே மக்களவைக்கு போட்டியிடும் கடைசி தேர்தல் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் ராஜஸ்தானில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வரும் பிப். 27-ஆம் தேதி 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ள நிலையில், சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.