வார்த்தைகளால் மாயங்கள் செய்த பாடலாசிரியர் தாமரை....
கவிதைகளால் மனங்களைக் கட்டிப் போடும் கவிஞர் தாமரையின் பிறந்த நாள் இன்று.. தன்னுடைய எழுத்துகளால் அவர் செய்த மாயங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
திரைத்துறையில் நடிகைகளைத் தவிர பெண்கள் சாதிப்பது இப்போதுதான் சாத்தியப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இருப்பினும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாடலாசிரியராக ராணி நடை போட்டு வருகிறார் கவிஞர் தாமரை... இப்படி காதல் வரிகளால் நம்மை கிறங்கடிக்கும் கவிஞர் தாமரையின் எழுத்துகளை பாம்பே ஜெயஸ்ரீ குரலில் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
1998-ம் ஆண்டு சீமான் இயக்கிய இனியவளே திரைப்படத்தில் தாமரை எழுதிய முதல்பாடலே செம ஹிட்... தேவாவின் இசையில், வழக்கத்திற்கு மாறாக மீண்டும் மீண்டும் பல்லவி வராமல் தாமரை எழுதிய அந்த பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தன.
மண்ணைத் தொடாத மழைத்துளியே நான் உன்னை ஏந்தி நின்றேன்
முத்து மாலையாக்கிக் கொண்டேன்
வண்ணம் கெடாத மேகங்களே ஏன் வானில் காய வேண்டும்
எந்தன் சேலை ஆக வேண்டும் - என்று பாடலை ரசித்தவர்கள் அனைவரும் யார் அந்த கவிஞர் என்ற கேள்வியை முன்வைக்க, தாமரை என்கிற படைப்பாளியின் முதல் பாடல் என்கிற ஆச்சரியத்தை பரிசளித்தார் அவர்...
தமிழ் சினிமாவில் கௌதம் வாசுதேவ் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ், பாம்பே ஜெயஸ்ரீ கூட்டணி தாமரையுடன் இணையும்போது உண்டாகும் மேஜிக்.. இசை ரசிகர்களை இன்று வரை மெஸ்மரைஸ் செய்து வருவதை யாராலும் மறுக்க முடியாது. காதல் பாடல்கள் மட்டுமல்லாது துள்ளலிசை பாடல்களும் தனக்கு கைவந்த கலை என நிரூபித்தவர் தாமரை...
தன்னுடைய பாடல் வரிகளின் உச்சரிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் தாமரை வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துபவர்.. அவர் கவிதையில் உருவான, தந்தை மகள் பாசத்தை விவரிக்கும் விஸ்வாசம் பட பாடலை முணுமுணுக்காதவர்களே இல்லை எனலாம்...
தாமரை பயன்படுத்தும் உவமைகளும் ரசிகர்களுக்கு விருந்தாய் அமைபவை... பல நூறு மொழிகளில் பேசும் மேதை நீ... என ஒரு தாய் தனது குழந்தையின் மழலை மொழியை குறிப்பிடுவது போல அவர் அமைத்த வரிகளை ரசிக்காமல் இருக்க முடியாது.
சுப்ரமணியபுரம் படத்தில் இடம் பெற்ற கண்கள் இரண்டால் பாடல், சண்டைக்கோழி படத்தில் இடம்பெற்ற கேட்டா கொடுக்குற பூமி இது போன்ற பாடல்கள் அவரால் எல்லாவித ரசிகர்களுக்கும் பாடல் இயற்ற முடியும் என்பதற்கு சான்றுகள்...
சாமி படத்தில் கணவன் மனைவி காதலை தேன்போன்ற வரிகளால் வார்த்தெடுத்தெடுத்திருப்பார் தாமரை....
கவிதையால் அழகிய இசை பிறந்ததா? இசையால் கவிதை ஏற்றம் பெற்றதா? என பட்டிமன்றமே நடத்தும் அளவிற்கு தாமரையின் பாடல்கள் தனித்துவம் வாய்ந்தவை...
அன்பால் மட்டுமே உலகை ஆள முடியும் என்பதை தனது வரிகள் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கும் தாமரையின் தூரிகைகள் ரசிகர்களின் மனதை ஆட்சி செய்து கொண்டே இருக்கும்...